கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரத்தை குறைத்து அங்கே சிங்கள வலயம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு.இரா.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன, அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. கிழக்கில் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் அரசாங்கம், தமிழ் மக்களை அங்கே அடக்கி ஒடுக்கி வருகின்றது. கிழக்கில் இருந்த தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதிக்கத்தை இல்லாமல் செய்யவே மகிந்த அரசாங்கம் இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்கிறது.
எனவே உடனடியாக இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்,கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கள் எவையும் கிழக்கு மாகாண நடவடிக்கைக்காக பெறப்படுவதில்லை.
கிழக்கு இராணுவ நடவடிக்கையால் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாகி விட்டனர். வாகரைக்கு ஜனாதிபதி சென்றார், அங்கே நிகழ்ந்த தாக்குதல்களில் மக்கள் உயிரிழக்கவில்லை என்றார். ஆனால் 300-க்கும் அதிகமான தமிழர்கள் அங்கே உயிரிழந்துள்ளனர். இந்த சாபக்கேடான நடவடிக்கை மூலம் அங்கே ஒரு திட்டமிட்ட நடவடிக்கை நிகழ்வது உறுதிப்படுத்தியுள்ளது.
கிழக்கை சிங்கள மயப்படுத்தவே மூதூர் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் ஆதரவு தரமாட்டோம். தமிழர்கள், ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதையே அந்த உயர்பாதுகாப்பு வலயம் கூறி நிற்கிறது.
தமிழ் மக்களைப் போன்றே முஸ்லிம் மக்களும் கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினர் கைப்பற்றிய பகுதிகளில் அரச நிர்வாகத்தை சீர்படுத்தி விட்டதாக அரசாங்கம் கூறுகின்ற போதும் அங்கே அரச நிர்வாகம் நடைபெறவில்லை.
விடுதலைப் புலிகளிடம் இருந்து மக்களை விடுவிப்பதாக கூறி குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் சம்பூரை ஆக்கிரமித்த இராணுவத்தினர் இன்னும் ஏன் அந்தப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்தவில்லை?
சம்பூரில் மக்களின் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அங்கே வீதிகளுக்கு சிங்களப் பெயர் சூட்டுகிறார்கள். தமிழ்- முஸ்லிம் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
நூறு வருடங்கள் பழமை வாய்ந்த காணி உறுதிகளை அங்குள்ள மக்கள் வைத்திருக்கின்றனர். ஆனால் அவை தற்போது அரச சொத்தாக்கப்பட்டு வருகின்றன. பதவியா, புல்மோட்டை, திரியாய், வெலிஓயா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையே புதிய சிங்கள வலயத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
Thursday, September 6, 2007
கிழக்கில் சிங்கள வலயம் பா.உ.இரா.சம்பந்தன்
பதிவர் தேனாடான் நேரம் 1:48 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment